

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜன.6-ம் தேதி தொடங்குவது தாமதமானால், அன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர பணிமனை முன்பாக, அனைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட வித்தியாச தொகையை மானியமாக கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
16 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பறிக்கப்பட்ட விடுப்பு சம்பளத்தை உடன் வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு உரிய பணப் பலனை உடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு நகர பணிமனை தொமுச துணை பொதுச்செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.
அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட கூட்டமைப்பு தலைவரும், தொமுச பொதுச்செயலாளருமான சு.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘வேலைநிறுத்தத்தை தொழிலாளர்கள் விரும்பவில்லை, கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜன.6-ம் தேதி 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவு மீறப்படுமானால், அன்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், சிஐடியு துணைத் தலைவர் திருநாவுக்கரசு, விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு நிர்வாகி செங்குட்டுவன், ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவர் ஜி.சண்முகம், செயலாளர் டி தங்கராசு, ஐஎன்டியுசி மத்திய சங்க பொருளாளர் க.சரவணன், நகர் கிளை நிர்வாகி தி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, அரியலூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சந்தானம் தலைமையிலும், தொமுச கிளைத் தலைவர் கனகராஜ் முன்னிலையிலும், ஜெயங்கொண்டத்தில் எல்பிஎப் மாவட்டச் செயலர் சேகர் தலைமையிலும், பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொமுச கிளைத் தலைவர் குமார் தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக கரூர் மண்டல அலுவலகம் முன் மண்டல தொமுச இணைச்செயலாளர் எஸ்.வேணுகோபால், குளித்தலை பணிமனை முன் தொமுச கிளைத்தலைவர் முனியப்பன், அரவக்குறிச்சி பணிமனை முன் கிளைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் அருகில் தொமுச கிளை செயலாளர் எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தொமுச மாவட்டச் செயலாளர் கே.கணபதி, மாவட்டத் தலைவர் அ.ரத்தினம், சிஐடியு பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.