

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்டதிரவ ஆக்சிஜன் கொள்கலனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ஏற்கெனவே 10 ஆயிரம் லிட்டர்கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளால் கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு ரூ.48 லட்சம் மதிப்பில் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திரவ ஆக்சிஜன் கொள்கலனை திறந்து வைத்தார்.
மேலும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, இருதயத்துடிப்பு, மூச்சுவிடும் தன்மை, இசிஜி மற்றும் இருதய இயக்கத்தையும், அதன் தன்மையையும் மருத்துவ அறையில் இருந்தே 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள நவீன தொலை கண்காணிப்பு கருவியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் சி.ரேவதி பாலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.