

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி நடுப்பட்டி கிராமத்தில் வேளாண் துறை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவம் தொடர்பான பேரணி நடந்தது.
பேரணிக்கு, வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் தலைமை வகித்தார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் பிரேம்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து தானியங்களான கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி உள்ளிட்டவற்றின் சாகுபடி பருவங்கள், வழிமுறைகள், அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் ஏந்தி சென்றனர்.
மேலும், அட்மா திட்டத்தில் வேளாண் மற்றும் வேளாண் சகோதரத்துறையின் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக கரகாட்டம், நாடகம், கிராமிய பாட்டு ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கொங்கணாபுரம் வட்டாரத்தில் அட்மா திட்டம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குநர் சாகுல் அமீத் தலைமை வகித்து, வேளாண் தொழில்நுட்பங்கள், மத்திய , மாநில அரசு திட்டங்கள் தொடர்பாக விளக்கினார்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கான பயிற்சி, கண்டுணர்வு பயணம், பண்ணைப்பள்ளி , செயல் விளக்கம், பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம், கூட்டுப் பண்ணைத் திட்டம், விவசாயிகள் குழுக்கள் அமைத்து அரசு மானியங்களை பெற்று தன்னிறைவு பெறுவது உள்ளிட்டவைகள் தொடர்பாக பாடல்கள், நகைச்சுவை, கலந்துரையாடல், கரகாட்டம் மூலம் விவரிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் குமரவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.