

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என மத்திய அரசு சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, பிரசவம், கரோனா சிகிச்சை தவிர்த்து மற்ற அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவர்கள் புறக்கணித்தனர். சேலம் மாவட்டத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2 ஆயிரம் மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அரசு மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.
கிளினிக்குகள் மூடல்
ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்களின் துணையின்றி எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யமுடியாது. ஒரு மருத்துவ முறையோடு இன்னொரு மருத்துவமுறை கலப்பதை இந்திய மருத்துவ சங்கம் எதிர்க்கிறது. எனவே இந்த அறிவிப்பினை ஆயுஷ் அமைச்சகம் திரும்ப பெறக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மூடப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 1500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்றி வரும் 3000 மருத்துவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் போராட்டம் நடைபெற்றது, என்றார்.
இதே போல, ஈரோடு மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
கிருஷ்ணகிரியில் போராட்டம்
தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள், பிரசவம் மற்றும் கரோனா சிகிச்சைகள் மட்டுமே மேற்கொண்டனர். புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவில்லை. அவசர சிகிச்சைகளில் ஈடுபட்ட மருத்துவர்கள் கருப்புபட்டை அணிந்திருந்தனர். இப்போராட்டத்தில் 2 மாவட்டங்களில் சுமார் 500 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.