

தமிழகத்தில் காலியாக உள்ள10,906 இரண்டாம் நிலை காவலர்,சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் டிசம்பர்13-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் பள்ளி, வஉசி கல்லூரி, செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி,காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் கல்லூரி மற்றும் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை மகளிர் கல்லூரி, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, முத்தையாபுரம் சாண்டி பாலிடெக்னிக் மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி, வாகைகுளம் அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, சாயர்புரம் ஜி.யு. போப்ஸ்கல்லூரி ஆகிய 13 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 16,134 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் வாட்ச் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை. அழைப்புக் கடிதம், அடையாள அட்டை, கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, பரீட்சைஅட்டை (Writing Pad)ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி சுப்பையா, அலுவலக கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.