Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இங்குள்ள பரம்பில் 1903-ம் ஆண்டு தொடங்கி பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இதில் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள், பல வடிவங்களில் மண் பானைகள், இரும்புஆயுதங்கள், கிண்ணங்கள், வெண்கலத்திலான அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.

தொடர்ந்து, 2004-ம் ஆண்டும், இறுதியாக கடந்த மே 25-ம்தேதி தொடங்கி செப்டம்பர் வரை யும் அகழாய்வு நடைபெற்றது. தமிழக தொல்லியல் துறை சார்பில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்றது.

இங்கு கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்ததில் அப்பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

கரோனா ஊரடங்கால் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளதால் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆதிச்சநல்லூர் வந்தனர். மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், அலுவலர் அரவாலி, பராமரிப்பு அலுவலர் சங்கர், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

ஆதிச்சநல்லூர் பரம்பு உள்ளிட்ட பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்க வாய்ப்புள்ள 5 இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். அவர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கத் தேவையான இடங்களை வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் காட்டினார்.

தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், சிவகலை அகழாய்வு இயக்குநர்கள் பிரபாகரன், தங்கதுரை, ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் லோகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் உள்ளிட்டோர் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

இதுகுறித்து அருண்ராஜ் கூறும்போது, ‘‘ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக 5 இடங்களை பார்த்துள்ளோம். இந்த விவரம் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டு, அரசுஒப்புதல் அளிக்கும் இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 3 ஆண்டுகளில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி முடிவடையும். அதுவரை தமிழக அரசு சார்பில்கட்டப்பட்டுள்ள அருங்காட்சியத்தில் தொல்லியல் பொருட்களை வைத்து தற்காலிகமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x