

ராமநாதபுரத்தில் மோதலில் ஈடுபட முயன்ற திமுக, அதிமுகவைச் சேர்ந்த 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதல்வர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, அவரது உருவப் பொம்மையை ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் சேது பாலசிங்கம் தலைமையிலான அதிமுகவினர் ராமநாதபுரம் அரண்மனை முன் நேற்று முன்தினம் எரித்தனர்.
அப்போது அங்கு வந்த திமுக நகர் செயலாளர் கார்மேகம், ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர் அதிமுகவினரைத் தாக்க முயன்றனர். இருதரப்பையும் தடுத்து நிறுத்தி போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 8 அதிமுகவினர் மீதும், 10 திமுக வினர் மீதும் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.