

சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களில் ஏற்படும் ஆணை கொம்பு, இலைசுருட்டு உள்ளிட்ட நோய் தாக்குதலை வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பயிர்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கிழக்கு கரை கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி கிழக்கு கரை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால் நீர் பாசனத்துக்கு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நடப்பாண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தேவூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. ஆந்திரா பொன்னி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஆணை கொம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருவது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, வேளாண்மை துறை சார்பில் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி காந்தி நகர், மூலப்பாதை உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று, நெல் பயிர் பரிசோதனையில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால் வேளாண்மை துறையின் அறிவுறுத்தலின்படி டிகேஎம் 13, ஏடிடி 45, வெள்ளைப் பொன்னி உள்ளிட்ட நெல் வகைகள் நடவு செய்யப்பட்ட வயல்களில் ஆனை கொம்பு, இலை சுருட்டு, மணிக்கட்டு, பூச்சிகட்டுதல் உள்ளிட்ட நோய் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான ஆலோசனைகளை, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுகன்யா, சேலம் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குநர் சுதா, துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன் தலைமையிலான குழுவினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விவசாயிகளுக்கு பருவநிலை காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் நோய்த் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது மற்றும் அதிக மகசூல் பெறுவது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர், இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.