Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

ஈரோடு - கோவை இடையே ‘ஈரோ -100’ பேருந்தை இயக்க காங்கிரஸ் கோரிக்கை

ஈரோடு - கோவை இடையே இடைநில்லா அரசுப் பேருந்து இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் கே.என். பாஷா, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோட்டில் இருந்து கோவை வரை ‘ஈரோ -100’ எனும் இடைநில்லாப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, பெருந்துறை, அவிநாசி என எங்கும் நிற்காமல் கோவை செல்லும் இந்த இடைநில்லாப் பேருந்துக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அவசர பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு செல்வோருக்கு இந்த பேருந்து சேவை பயனுள்ளதாக இருந்தது.

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ‘ஈரோ-100’ பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் நிலையில், ‘ஈரோ-100’ பேருந்து மட்டும் இயக்கப்படவில்லை. இந்த பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் தனியார் பேருந்துகளை நாட வேண்டியுள்ளது.

இடைநில்லா பேருந்து இயக்கப்படாததன் மூலம், தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக அரசு பேருந்து நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈரோடு - கோவை இடையே இடைநில்லாப் பேருந்து சேவையை உடனடியாகத் தொடங்க வேண்டுகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x