Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM

திருப்பத்தூரில் புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்க இடையூறாக இருந்த மரங்களை அகற்றி மறுநடவு செய்யும் பணி தொடக்கம் ஆட்சியர் ஆலோசனைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு

திருப்பத்தூர் வனச்சரக அலுவ லகத்தில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்க இருப்பதால், அங்குள்ள மரங்களை வேரோடு அகற்றி மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிக கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில், தரைதளத்துடன் 7 மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு ரூ.109.71 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டி தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற் கான பணிகள் தொடங்கப்பட்டன. இடம் அளவீடு செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், ஆட்சியர் அலு வலகம் அமையவுள்ள இடத்தில் பழமை வாய்ந்த மரங்கள் நூற்றுக்கணக்கில் இருந்ததால் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளுக் காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையறிந்த, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மரங்களை வெட்டாமல் வேருடன் அகற்றி, மற்றொரு இடத்தில் மரங்களை மறுநடவு செய்ய பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றி வேறு இடத்தில், மரங்கள் மறுநடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ‘டிரீ டிரான்ஸ் பிளான்ட்டிங்’ முறையில் மரங்கள் மறுநடவு செய்யப்படுகின்றன. இதற்காக, பிரத்யேக வாகனத்தை அம்மாநிலத்தவர்கள் பயன்படுத்து கின்றனர். அதற்கு நிறைய செலவும் ஆகிறது.

அதற்கு மாறாக, மணல் அள்ளும் இயந்திரம், கிரேன் மூலம் மரங்களை மறுநடவு செய்தால் குறைந்த செலவாகும் என்பதால் திருப்பத்தூரில் புதிய முயற்சியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, மரங்களை சுற்றி இடைவெளி விட்டு குழி தோண்டி, பெரிய வேர்கள் மரக்கிளைகளை அகற்றிவிட்டு மீதமுள்ள வேர்களில் மண் ஒட்டி இருக்குமாறு மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, வேறு இடத்தில் 5 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட குழியில் மரங்களை மறுநடவு செய்து, அந்த குழிக்குள் இயற்கை உரம், மருந்து கரைசலை தெளித்தால் மரங்களின் வேர்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள உரத்தால் சில நாட்களில் மரங்கள் துளிர்த்து வளரத்தொடங்கி விடும்.

இது போன்ற முயற்சி ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது முதன் முறையாக தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மரத்துக்கும் மறு உயிர் கொடுக்கும் முயற்சியை எடுக்குமாறு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் முடிய ஓரிரு வாரங்கள் ஆகும் என தெரிகிறது.

இங்கிருந்து அகற்றப்படும் மரங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி வளாகத்தில் மறுநடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். சில மரங்கள் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகே ஆட்சி யர் அலுவலக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’’ என்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளின் ‘மரங்கள் மறுநடவு’ ஆலோசனைக்கு சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x