Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்றவர்களுக்கு நோட்டீஸ்

துத்திப்பட்டு கிராமத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்றவர்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரி முழுக்க சமூக நலத்துறை ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆதரவற்ற, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் துத்திப்பட்டு கிராமத்தில் சில பெண்கள் தகுதி இல்லாத சூழலில் ஆதரவற்றோருக்கான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆதரவற்ற பெண்கள் பட்டியலை சரிபார்க்க சமூக நலத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

சம்பந்தப்பட்டோரின் பெயருடன் இப்புகார் பட்டியல் வந்ததால் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கே சென்று ஆய்வு செய்யப்பட்டது. துறை செயலர் உதய்குமார் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். புகார் வந்த கிராமத்தில் 60 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் நீண்டகாலமாக தவறான தகவல் அளித்து ஓய்வூதியம் பெறுவதில் மோசடி செய்துள்ளதாக சமூக நலத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து அவர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக சமூக நலத்துறை நிறுத்தியுள்ளது. அவர்கள் எவ்வளவு காலம் ஓய்வூதியம் பெற்றார்கள் என்ற பதிவுகளும் சரிபார்க்கப்பட்டது. அத்தொகையை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் மொத்தம் 9,367 ஆதரவற்ற பெண்கள் மாதந்தோறும் உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டுதோறும் ரூ. 16.9 கோடி நிதி செலவிடப்படுகிறது. உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்நிதி சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வுப் பணிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயனாளிகளை ஆய்வு செய்வார்கள்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x