Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

தமிழகத்தில் முதல் முறையாக கடலூரில் பயிர்களின் சாம்பல் சத்தைக் கூட்டும் உயிர் உரம் உருவாக்கம்

கடலூர்

தமிழகத்திலேயே முதல் முறையாக பொட்டாஷ் சத்தினை பயிருக்கு அளிக்கும் உயிர் உரம் கடலூரில் உள்ள வேளாண் துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் கடந்த செம்டம்பர் மாதம் முதல் பொட்டாஷ் (சாம்பல் சத்து) உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகை சத்துக்களில் பெரும்பாலனவை ரசாயன உரங்களாகவே இடப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு படுவதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண் புழுக்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு இடும் ராசாயன உரங்கள் 40 சதவீதம் மட்டுமே பயிருக்கு கிடைக்கிறது.

இந்த இடர்பாடுகளை களைந்து சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாமலும், உரச் செலவை குறைக்கும் விதமாகவும், வேளாண் துறை மூலம் பல்வேறு உயிர் உரங்கள் தயாரித்து வழங்கி வருகிறது. தழைச்சத்தை அளிக்கும் அசோஸ்பைரில்லம் மற்றும் மணிச்சத்தை கரைத்து அளிக்கும் பாஸ்போபாக்டீரியம் ஆகியவற்றை கலந்து அசோஃபாஸ் என்ற கூட்டு உயிர் உரம், தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாம்பல் சத்தை அளிக்கும் உயிர் உரம் கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் வேளாண் இணை இயக்குனர் முருகன் கூறுகையில், “கடலூர் உயிர் உர உற்பத்தி மையம் மூலம் தயாரிக்கப்படும் உயிர் உரங்கள் கடலூர், நாகை மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டலூர் மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இந்த திரவ உயிர் உரங்களை வாங்கி பயன்படுத்தலாம். விரைவில் இது பிற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும். விவசாயிகள் 6 மாதங்கள் வரை இந்த உயிர் உரத்தை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்” என்றார்.

கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் கூறுகையில்,

“இந்த வகை திரவ உயிர் உரங்களில் ஒரு மில்லியில் 1 கோடி நுண்ணுயிர்கள் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை விதை நேர்த்தி செய்யவும், நாற்றின் வேரை நனைத்து நடவும், நேரடியாக நடவு வயலில் இடவும் மற்றும் சொட்டுநீர் பாசனம் மூலம் கலந்து நீர் வழி உரமாகவும் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

கடலூர் உயிர் உர உற்பத்தி மைய மூத்த வேளாண் அலுவலர் முகமது நிஜாம் கூறுகையில், “இந்த உயிர் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சி மேம்படுகிறது. பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி, 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்பாக அமைகிறது. மண் வளம் காத்து, குறைந்த செலவில் அதிக லாபம் அடைய முடியும். உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x