Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

பல்கலைக்கழகங்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் உண்டு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் கலை, அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து பருவத் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்தது.

இத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), “அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், யுஜிசி விதிகளுக்கு முரணானது. அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது” என்று பதில் மனு தாக்கல் செய்தது.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்துதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், விடுதிகளும் மூடப்பட்டன. இதனால் கல்லூரிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊரடங்கும் தற்போது வரை நீடிக்கிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழகங்களுடன் கலந்து பேசிய பிறகே அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. மாணவர்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சரிசமமான குறைந்த பட்ச மதிப்பெண் வழங்கப்படும். அதில் திருப்தி இல்லாதவர்கள் பின்னர் தேர்வு எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். யுஜிசி பரிந்துரைகள் அறிவுரைகளாகவே உள்ளன. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலன் கருதி சொந்தமாக திட்டங்களை வகுக்க முடியும். இது எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காது. இதனால் கல்வித்தரமும் பாதிக்கப்படாது.

மேலும், அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவது போலாகாது. அசாதாரண சூழலில் தேர்வுகளை ரத்து செய்யும் முழு அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது.

எனவே அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x