டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில்
சேலம் சந்தியூரில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. மாவட்ட டாஸ்மாக் மேலாளராக அம்பாயிரநாதன் உள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விற்பனை செய்யும் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-ம், ஃபுல் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20-ம் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் நாகூர்மிராஷா, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் நேற்று மாலை சேலம் டாஸ்மாக் குடோனில் இயங்கி வரும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கணக்கில் வராத ரூ.1.21 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் இருந்தும், பார்களில் இருந்து வசூலித்ததற்காக ‘எழுதி வைத்திருந்த குறிப்பு சீட்டை’ லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைப்பற்றினர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
