

தீபாவளியை முன்னிட்டு அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரோனா பரவல் மற்றும் காற்று மாசுபடுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையும் என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு கால அளவு நிர்ணயித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகையின்போது வீட்டை பூட்டிவிட்டுவெளியூர் செல்லும் பொதுமக்கள்அவரவர் பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்கு காவலர்கள் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பார்கள். பொதுஇடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.