நடக்காத திருமணத்தை நடந்ததாக பதிவுமாவட்ட பதிவாளர் பதிலளிக்க உத்தரவு

நடக்காத திருமணத்தை நடந்ததாக பதிவுமாவட்ட பதிவாளர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் பெண் கோவை கல்லூரியில் நடைபெற்ற செய்முறை தேர்வில் பங்கேற்ற நாளில், தூத்துக்குடியில் அவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகப் பதிவு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர், சார் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் பிளஸ் 2 படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாகக் காதலித்தார். பிளஸ் 2 முடித்து நான் கோவையில் தனியார்கல்லூரியில் பி.டெக். படிப்பில் சேர்ந்தேன்.

இந்நிலையில், அவருக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 8.8.2017-ல் திருமணம் நடைபெற்றதாக, கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் உறுதியானது.

இந்த ஆவணங்களுடன் பங்குத்தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி பங்குத் தந்தையிடம் விசாரித்தபோது, குறிப்பிட்ட நாளில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெறவில்லை என்றும், அதுபோன்ற சான்றிதழ் தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் நாளில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றேன். அதற்கான ஆன்லைன் வருகைப் பதிவேடு உள்ளது.

இந்நிலையில், போலி திருமணப் பதிவு அடிப்படையில் தன்னுடன் வந்து வாழுமாறு டார்வின் ஜனவரி மாதம் முதல் என்னை மிரட்டி வருகிறார். கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமணப் பதிவு சான்றிதழை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் என் மனுவை நிராகரித்துவிட்டார். எனவே, கீழுர் சார் பதிவாளர் வழங்கிய திருமணப் பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர், கீழூர் சார் பதிவாளர் மற்றும் டார்வின், புன்னைக்காயல் புனித சேவியர் ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் ஆகியோர் நவ.30-க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in