

ஊத்தங்கரை அருகே மனைவியை கொலை செய்த கணவர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த பள்ளசூளகரை கிராமத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி தங்கராஜ் (36). இவரது மனைவி ருக்மணி (30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ருக்மணி, போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள காலணிகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மனைவி மீது சந்தேகம் அடைந்த தங்கராஜ், மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மணியின் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்தார். பின்னர், கல்லாவி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீஸார், ருக்மணியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.