போலி மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை: ஆட்சியர் எச்சரிக்கை

போலி மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை: ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

அங்கீகரிக்கப்படாத போலியான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ஒருங்கிணைந்த தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டங்களில் சிகிச்சை பெற பொதுமக்கள் பெற்றுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையே போதுமானதாகும். தனியாக பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் எவ்வித அடையாள அட்டையும் அரசால் வழங்கப்படுவது இல்லை. மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறையில் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட சில தனிநபர்கள் முறைகேடாக பொதுமக்களிடம் இருந்து ரூ.20 முதல் ரூ.150 வரை பெற்றுக் கொண்டு அச்சிடப்பட்ட போலியான பிரதம மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்ட அட்டை வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோல் பொதுமக்களிடம் இருந்து தவறான முறையில் பணம் பெற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்படாத அச்சிடப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக 1800 425 3993 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in