

மயிலாடுதுறை அருகே கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் புதைந்திருந்த சனி பகவான் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே விளநகர் வேயுறு தோளியம்மை உடனாகிய துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, அக்கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்ற யாகசாலையில் தானியம் வைக்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.
பின்னர், கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் தென்னங்கன்று நடுவதற்காக கோயில் நிர்வாகத்தினர் குழி தோண்டினர். அப்போது, ஓரடி உயரமுள்ள சனி பகவான் கற்சிலை ஒன்று மண்ணில் புதைந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து. கோயில் நிர்வாகத்தினர் அந்த சிலையை வெளியில் எடுத்தனர். சிலையை பார்வையிட்ட தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம், சனிபக வானுக்கு வன்னி மரம் தல விருட்சமாக விளங்குவதாகவும், இந்த சனி பகவான் சிலையை கண்டெடுக்கப்பட்ட வன்னி மரத்தடியிலேயே மேடை அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து, வன்னி மரத்தடியில் மேடை அமைத்து சனி பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.