

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா இன்று (அக்.30) அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 6.15 மணி அளவில் மதுரை வந்தார். அவர் 6.20 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அவரை மதுரை திமுக மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், கோ.தளபதி ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழரசி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தென் மாவட்டச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஸ்டாலின் தங்கி உள்ளார். அவரை திமுகவினர் வழிநெடுக வரவேற்றனர்.