Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

உதகையில் அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது எப்படி? : வாரத்தில் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு

உதகையில் அரசுப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்ததுஎப்படி என்று, 3 வாரத்தில் விளக்கம்அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பள்ளி பகுதிநேர ஆசிரியர் உஷா தாக்கல் செய்தமனுவில், “நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார்பள்ளி அருகே, அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உழவர் சந்தை, பட்டாசு கடைகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளிக்கு சொந்தமான 2.40 ஏக்கர் விளையாட்டு மைதானத்தை காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதி வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்ததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை திரும்பப்பெறுவதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்பது குறித்தும், சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியது எப்படி என்பது குறித்தும் மூன்று வாரத்தில்விளக்கம் அளிக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மைதானத்தை சுற்றி வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x