

திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்தை சேர்ந்த தம்பதி கோபால் (50), தெய்வானை (48). இவர்களுக்கு 2 மகன்கள், மகள் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்து கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக திருப்பூர் பழக்குடோன் பகுதியில் தனியாக தெய்வானை வசித்து வந்தார். குழந்தைகள் மூவரும் ஊரில் இருந்துள்ளனர்.
பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தெய்வானைக்கு, மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஒருவர் ஏமாற்றியதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் அடிக்கடி காவல் நிலையங்களில் புகாரும் அளித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பழக்குடோன் பகுதிக்கு வந்த தெய்வானை, சாலையின் நடுவே நின்றபடி திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தெய்வானையின் உறவினர்களுக்கு திருப்பூர் மத்திய போலீஸார் தகவல் அளித்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்து வருகின்றனர்.