

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயங்கி வந்த வெல்டேக்ஸ் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தினருக்கு பாத்தியப்பட்ட காங்கயம் வட்டம் நிழலி கிராமத்தில் உள்ள 3.6 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன்கோவில் கிராமத்தில் உள்ள ஆயிரத்து 235 சதுர அடி கொண்ட அசையா சொத்து மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வந்த ஆதவன் ஈ.மு. பார்ம்ஸ் நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட உடுமலை ஆமந்தகடவு கிராமத்தில் உள்ள 15.98 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம், 1997-ன் கீழ், தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் வருகிற 21-ம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
பாசி பாரக்ஸ் நிறுவனத்துக்கு பாத்தியப்பட்ட காங்கயம் வட்டம் வீரணம்பாளையம் கிராமத்தில் உள்ள 7.41 ஏக்கர் நிலம் மற்றும் சிவன்மலை கிராமத்தில் உள்ள 2 ஆயிரத்து400 சதுரஅடி மனையிடம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த ஈ.மு. பார்ம்ஸ் நிறுவனத்தினருக்கு பாத்தியப்பட்ட காங்கயம் சேனாதிபாளையம் கிராமத்தில் உள்ள 5 ஆயிரத்து 193 சதுர அடி மனையிடம் ஆகியவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997-ன் கீழ் தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் வருகிற 23-ம் தேதி தேதி காலை 11 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள அரங்கில் அறை எண் 240-ல் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
மேற்கண்ட சொத்துக்களை ஏலம் எடுக்க விரும்புகிறவர்கள் ஏல நிபந்தனைகள் தொடர்பான விவரங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பதாகைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த திவாலான நிறுவனங்களின் சொத்துகள் நிலையில் உள்ள விதத்தில் ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பத்தை பெற்று, ஏல தேதிக்கு முதல் நாள் மாலை 5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.