

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை, போலீஸார் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,மாநகர காவல் சோதனைச்சாவடிகளில் நேற்று அதிகாலை தீவிரவாகனத் தணிக்கை செய்யப்பட்டது. அங்கேரிபாளையம் சாலை கொங்கு நகர் பள்ளி அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், தேனி மாவட்டம் மேகமலையைச் சேர்ந்த பால்பாண்டி (21) என்பவர் வாகனத்தை ஓட்டி வந்ததும், தேனி மற்றும் திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், கஞ்சா பொட்டலங்களுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சென்னகேசவன், காவலர்கள் விசுவநாதன், சிவக்குமார், முதல்நிலை காவலர் பாஸ்கரன், தங்கராஜ் ஆகியோரை பாராட்டி, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா வெகுமதி வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மேலும் சிலரைத் தேடி வருகிறோம். கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.