Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான - 10.5 % உள்இடஒதுக்கீடு ரத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பிப்.15, 16-ல் விரிவான விசாரணை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 15, 16-ல்விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னாஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி,‘‘உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில்தான் வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், கல்லூரி மாணவர்சேர்க்கை, தடைபட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக 75 ஆயிரம் மாணவர்கள் காத்திருக்கின்றனர்’’ என்றுவாதிட்டனர்.

உள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் கள் தரப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகமுத்து ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 160 பிரிவினர் இருக்கும்போது, அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவத்துக்கு எதிரானது. எந்த தரவுகளும் இல்லாமலேயே வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வன்னியர் உள் இடஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கில், தற்போது எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நேர விரயத்தை தவிர்க்க இரு தரப்பிலும் இருந்து வழக்கறிஞர்கள் அனைத்து கருத்துகளையும், எழுத்துப்பூர்வ வாதங்களையும் தொகுத்து நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.

எனவே, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் நாகமுத்து, கோபால் சங்கர நாராயணன், வழக்கறிஞர்கள் டி.குமணன், எம்.பி.பார்த்திபன், பிரகாஷ் ஆகியோர் எழுத்துப்பூர்வ வாதம், பிரதிவாதங்களை தொகுத்து ஒரே நகலாக வழங்க வேண்டும். இதை வரும் பிப். 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கு பிப். 15, 16-ம் தேதிகளில் விரிவாக விசாரிக்கப்படும். அந்த இரு நாட்களில் வழக்கின் வாதங்களை அனைத்து தரப்பும் முடிக்க வேண்டும். இவ்வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விசாரணையை ஒத்திவைக்க எவரும் அனுமதி கோரக்கூடாது.

மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த உத்தரவு வரும்வரை எந்த மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் செய்யக் கூடாது. ஏற்கெனவே செய்யப்பட்ட பணி நியமனங்கள், மாணவர் சேர்க்கைகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x