Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் : பரப்பை குறைக்கும் முடிவு திரும்ப பெறப்படுகிறது : தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தகவல்

சென்னை

கடந்த 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதம் அதிமுக ஆட்சியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தொடர்பாக தேசிய வன உயிரின கழகத்திடம் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதில், சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிமீ சுற்றளவில் இருந்து 3 கிமீ ஆக குறைக்க கோரிக்கைவைக்கப்பட்டது. இதன் மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதியளிக்கப்படும் அபாயம் உருவானது. இதுதவிர, அங்குள்ள மக்கள் சிறிய அளவில் தொழில் செய்யவும், நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளவும் வசதி ஏற்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு வனவியல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சரணாலயத்தின் பரப்பை குறைக்கும் நடவடிக்கை இல்லை என வனத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், நிலப்பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜிடம் அரசு கேட்டிருந்தது. இதையடுத்து, அவர் கடந்த 15-ம் தேதி வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூவுக்கு அனுப்பிய கடித்தில் கூறியிருப்பதாவது:

வேடந்தாங்கல் மிகவும் பழமையான நீர்வாழ் பறவைகள் சரணாலயமாகும். ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு வரும் பறவைகள் கணக்கெடுப்பில், 28 ஆயிரம் நிலம் மற்றும் நீர்வாழ் பறவையினங்கள் இந்த ஈர நில சரணாலயத்துக்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்தால், பல்லுயிர் பரவல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பறவைகள் எண்ணிக்கையும் குறைந்துவிடும். குறிப்பாக நீர்வாழ் பறவைகளின் வாழ்விடம் முழுமையாக பாதிக்கப்படும். பரப்பளவை குறைக்கும் பரிந்துரை பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஏற்கெனவே எல்லையைக் குறைக்கக் கோரி அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x