Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும் - மக்கள் நலனுக்காக ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும் இதுவரை மக்கள் நலனுக் காக ஒரு திட்டமும் கொண்டுவர வில்லை, என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக் கல்லில் நடைபெற்றது. இதில், குஜராத் மாநிலம் ஆனந்த் எனும் இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய நேரடிக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவுக்கும், அதிமுக வுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக வலிமையான கட்சியாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வடிவங்களில் வேளாண் சட்டங்கள் உள்ளன. சட்டம் குறித்த புரிதல் இல்லாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இச்சட்டம் திரும்பப்பெறப்பட்டது. ஒருநாள் வேளாண் சட்டம் வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுப்பர். அப்போது இந்த சட்டம் நிச்சயம் வரும்.

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு விருது கொடுக்கவில்லை. ஏதோ வொரு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அரசுப் பள்ளியின் பின்புறம் 10 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஒரு பெட்டிஷன், ட்விட்டர் செய்வதற்கெல்லாம் தேசத் துரோகம், குண்டாஸ் போன்ற வழக்குகள் தமிழகத்தில்தான் போடப்படுகிறது. இந்தி யாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் வழக்குப் பதிவு செய்வதில்லை.

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 6 மாத காலமாகிவிட்டது. இதுவரை மக்கள் நலனுக்காக ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. தமிழக அரசு பிரதமர் மோடியின் திட்டங்களைக் காப்பியடித்து செயல்படுத்தி வருகிறது, என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் பேசும்போது, அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படும், என கூறினார். அப்போது ஸ்டாலின் கூறியதையே புகாராக ஏற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.

கருத்தரங்கில், பாஜக மாவட்டத் தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் பி.முத்துக்குமார், ஜி.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x