

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம், ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கோவை நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.
விழாவுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ்அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்து பேசும்போது, “நம்முடைய நாட்டின் வளர்ச்சியில் இளைய சமுதாயத்தினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர்ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டு முகாமுக்கான இலச்சினை, கையேட்டை வெளியிட்டார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ.காளிராஜ், முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, “இந்த முகாமில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பங்கேற்றுள்ளது நமக்கு பெருமையளிப்பதாகும்” என்றார்.
நிகழ்வில், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஆர்.அண்ணாதுரை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சி.வி.ராம்குமார், ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் பி.எல்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் நன்றி கூறினார். இம்முகாம் வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.