

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 3,000-க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் 11.2 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ரூ.9 கோடி மதிப்பில் உயர்தர விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்காலத்தில் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள், ஆய்வகங்கள் கட்டுவதற்கு இடவசதியில்லை என்றும், இதனால் கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தி நேற்று காலை சிக்கண்ணா அரசுகல்லூரி வாசலில் அமர்ந்து மாணவ,மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.