தூத்துக்குடியில் டிச. 18, 19-ல் மனநல மருத்துவர்கள் மாநில மாநாடு :

தூத்துக்குடியில் டிச. 18, 19-ல் மனநல மருத்துவர்கள் மாநில மாநாடு :
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்கம் சார்பில், மாநில மனநல மருத்துவர்கள் மாநாடு தூத்துக்குடியில் டிசம்பர் 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனநல மருத்துவ சங்கத்தின் பொருளாளர் எஸ்.சிவசைலம் கூறியதாவது:

தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் மாநில மனநல மருத்துவர்கள் மாநாடு வரும் 18, 19-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் டி.குமணன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் எம்.மாலையப்பன், செயலாளர் டி.சிவ இளங்கோ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டி.நேரு தொடங்கி வைக்கிறார். மாநாட்டு தலைவரான சி.பன்னீர் செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மனநல துறை தலைவர் எம்.பி.அப்துல் ரகுமான் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து 300 மனநல மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் தற்போது 25 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். இளம்சிறார்கள் அதிகமாக மது போதைக்கு அடிமையாகின்றனர். 13 வயது சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு 'போதை ஒழிப்பு மனநல மருத்துவம்' என்ற கருத்தை மையமாக வைத்து மாநாடு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in