Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM

மத்திய அரசின் நிதி பிரயாஸ் திட்டத்தில் பயனடைய - சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை. இளைஞர்களுக்கு அழைப்பு :

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ் பயனடைய தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், புதுமை படைப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அணுகலாம். இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒரு மையமாக சாஸ்த்ரா விளங்குகிறது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினரால் உருவாக்கப்பட்ட நிதி பிரயாஸ் திட்டம் புதுமை படைப்பில் திறன் உள்ளவர்களை ஊக்குவித்து, அவர்களது தொழில்நுட்பம் சார்ந்த யோசனைகளைக் கொண்டு தொடக்கநிலை நிறுவனங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. ஆர்வமுள்ள இளைஞர்களின் யோசனைகளை தயாரிப்பு முன்வடிவமாக மாற்ற நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்த சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்ரமணியம், இளைஞர்கள் இத்திட்டத்தில் அதிகளவில் பங்கு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெறலாம். மேலும், சாஸ்த்ராவில் உள்ள 3டி பிரின்டிங், விஆர் மற்றும் டிரோன் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள், சாஸ்த்ராவின் தொழில்முனைவோருக்கான இன்குபேஷன் மையத்தின் நவீன கம்ப்யூட்டர் வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். உற்பத்தி, விவசாயம், சுகாதாரம், ஆற்றல், நீர் ஆகிய இத்திட்டத்தின் முக்கிய துறைகளில் புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் கூடுதல் தகவல் பெறவும் விண்ணப்பிக்கவும் prayas.sastratbi.in என்ற இணையதள முகவரியை அணுகலாம். இத்திட்டத்தில் டிச.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x