Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20 மாதங்களுக்குப் பின்னர், பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளன் குளத்தில் புனித நீராடிவிட்டு, குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு, தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அர்ச்சனை வழிபாடு, நளன் குளத்தில் பக்தர்கள் நீராடுவது உள்ளிட்டவற்றுக்கு 2020 மார்ச்சில் தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து, பொது முடக்கத்தில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், நளன் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட பக்தர்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 20 மாதங்களுக்கு பின்னர், பக்தர்கள் தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் கூறியது: கோயிலில் வழக்கமான உற்சவங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. அரசின் வழிகாட்டுதல்களின்படி படிப்படியாக தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பங்களிப்புடன் அபிஷேகம், ஹோமம் செய்ய இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT