Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் கண்ணனூர் ஏரியின் உபரிநீர் விவசாய நிலங்களில் தேங்கி அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறி விவசாயிகள் நூதன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள கண்ணனூர் கிராமத்தில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் சுமார் 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியின் கீழ் பகுதியில் உள்ள ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கால்வாய் வழியாக தண்ணீர் செல்லாமல் அருகே உள்ள விவசாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. தொடர்ந்து விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குவதால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தண்ணீரில் நெற் பயிர்கள் மூழ்கியதால் நெல் மணிகளில் இருந்து நாற்றுகள் முளைக்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து, ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு குறித்து விவசாயிகள் தரப்பில் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் உழவர் பேரவை தலைவர் புருஷோத்தமன் தலைமையில் தண்ணீர் தேங்கிய விவசாய நிலத்தில் இறங்கி நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜனை சந்தித்த விவசாயிகள், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனுவை அளித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரி கால்வாயை தூர்வாரி சிமென்ட் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT