Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

ஏசி, கணினி, குளிர்சாதன பெட்டி பயன்படுத்தும்போது - மின் சிக்கனத்துக்கான வழிமுறைகள் : மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல்

தேசிய மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்த கோவை மண்டல மின்வாரிய தலைமைப்பொறியாளர் இ.டேவிட் ஜெபசிங்.

கோவை

எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய மின் சிக்கன வாரம் டிசம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசகங்கள் அடங்கிய வாகனத்தை, டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்பு கோவை மண்டல மின்வாரிய தலைமைப்பொறியாளர் இ.டேவிட் ஜெபசிங் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர், மின் சிக்கனம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏசி-யின் வெப்ப அளவை 24 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வைத்து உபயோகிக்க வேண்டும். குளிர்சாதன பெட்டிகளின் மோட்டாரும், கம்ப்ரசரும் அதிக வெப்பத்தை வெளிப்படுத்துவதால், குளிர்சாதன பெட்டியைச் சுற்றி தேவையான அளவு (சுவரிலிருந்து 30 செ.மீ இடைவெளி) காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியை அடிக்கடி திறந்து, மூடுவதை தவிர்க்க வேண்டும். அலங்கார விளக்குகளை உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

டிவி, ஏசி போன்ற உபகரணங் களை ரிமோட் மூலம் மட்டுமே அணைத்துவிட்டு செல்வதால் மின்சக்தி செலவாகும். சுவிட்சை பயன்படுத்தி அணைத்தால் மின்சாரம் மிச்சமாகும். வீடு, அலுவலகத்தில் உபயோகப்படுத் தப்படும் கணினிகளில், கணினி அமைப்புக்கு தேவைப்படும் சக்தியில், பாதி அளவுக்கு மானிட்டர் எடுத்துக்கொள்வதால், உபயோகத்தில் இல்லாதபோது மானிட்டரை அணைத்துவிட வேண்டும். எரிசக்தி சிக்கன அமைப்பு (பிஇஇ) அங்கீகாரம் பெற்ற ஐந்து நட்சத்திரம் குறியிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை உடனடியாக அணைத்துவிட வேண்டும். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, தண்ணீர் பம்ப் முதலியவற்றின் மோட்டார்களை ‘காயில் ரீவைண்ட்’ செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்வில், மின்வாரிய மேற் பார்வை பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x