Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 4,828 மகளிர் குழுவினருக்கு ரூ.239.21 கோடி கடனுதவி : அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வழங்கினர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 4,828 மகளிர் குழுவினருக்கு ரூ.239.21 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் மாவட்ட அளவில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்டத்தில் உள்ள 2,679 மகளிர் குழுவினருக்கு ரூ.115.82 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இதில், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம்

காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமுலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,234 மகளிர் குழுக்களுக்கு ரூ.70.35 கோடி மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கினர்.

வேலூர் மாவட்டத்தில் மகளிர் குழுவின் மரப்பொம்மைகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான அமைச்சகத்தின் கீழ் திட்ட செயலாக்க அலகாக அங்கீகரிக்கப்பட்டு ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழில் பகுதிகள் ஏற்படுத்தி சுமார் 1,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் மகேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 915 மகளிர் குழுவினருக்கு ரூ.53.04 கோடிக்கான கடனுதவிகளை ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கினர்.

இதில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் பொருளாதார முடிவுகளை ஆண்கள் எடுத்தனர். அதை மாற்றிய திட்டம் மகளிர் சுய குழுக்கள்தான். மாநிலத்தின் வளர்ச்சியில் பெண்களை அதிகளவில் பங்கேற்க வைத்ததும் இந்த குழுக்கள்தான். ஒரு கடைக்குச் சென்றால் பிரபல நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை பார்க்கிறோம். அதே பொருட்களை நம்மூரில் உள்ள குழுக்கள் தயாரிப்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கிராமங்கள் அளவில் செயல்படும் மகளிர் குழுவினர் புதிய உற்பத்தி பொருட்களை தயாரிக்க திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுத்தால் அதற்கு மாவட்ட நிர்வாகம் ஆதரவு அளித்து கடனுதவி பெற்றுத்தரப்படும். மகளிர் குழுவினர் தயாரிப்பு பொருட்களை மாதம் ஒருமுறை கண்காட்சி மூலம் விற்பனை செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x