

செல்ஃபி மோகத்தால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஸ்மார்ட் போன்கள் மூலம் தங்களை சுயமாக படம் எடுத்துக்கொண்டு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் மோகம் இன்று அதிகரித்துவிட்டது. செல்போனில் செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை உயிர் பறிப்புகளுக்குக் காரணமாகவும், சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர்களுக்கு மனநோயாக மாறி வருவதுடன் நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை உருவாகுவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர்.
தற்போது செல்ஃபி பிரியர்களால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் பயணிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
ராமேசுவரம் தீவை இணைக்கும் இரண்டரை கிலோ மீட்டத் தூரமுள்ள பாம்பன் பாலத்தில் இருந்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல்கள், பாம்பன் ரயில் பாலம், பவளப்பாறைகள், குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு, கலங்கரை விளக்கம் ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.
பாம்பன் சாலைப் பாலத்தின் இரு புறங்களிலும் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தங்களின் வாகனங்களை நிறுத்தி செல்போன் மற்றும் கேமராக்களில் செல்ஃபி மற்றும் குரூப்ஃபீ , புகைப்படங்களை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் பாம்பன் பாலத்தைக் கடக்கும் பேருந்துகள், கார்கள், வேன்கள் நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் பொதுமக்களும் பயணிகளும் தவிக்கின்றனர்.
இது குறித்து பாம்பன் காவல்துறை அதிகாரி கூறியதாவது:
சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ராமேசுவரம் வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் வாகனங்களை பாம்பன் பாலத்தில் நிறுத்தி செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் வேடிக்கை பார்ப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுபோல சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தில் புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்க முடியாது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை நாங்கள் முறையாக ஒழுங்குப்படுத்துகிறோம், என்றார்.