Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

ஓசூரில் 11 தொழில் நிறுவனங்களுக்குரூ.10.58 கோடி கடன் பெறுவதற்கான ஆணை :

ஓசூரில் 11 தொழில் நிறுவனங் களுக்கு ரூ.10.58 கோடி தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக 11 தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரூ.10.58 கோடி மதிப்பில் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கிப் பேசியதாவது:

தமிழக முதல்வர், தொழில் திட்டங்கள் புரட்சிகரமாக செயல்படுத்தும் விதமாக, 2021-22 நிதியாண்டில், ரூ.2500 கோடி கடனுதவிகள் வழங்க இலக்கு கொண்டு சிறப்பு தொழில் கடன் வழங்க ஆணையிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் ஓசூர் கிளைக்கு ரூ.200 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.110 கோடி தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஓசூர் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரித்தல், ரப்பர் தயாரிப்பு, கெமிக்கல் தொழிற் சாலை, உணவுப் பதப்படுத்தும் தொழில் நிறுவனம், ஆயத்த ஆடை தயாரித்தல், மருத்துவ உபகரணங்கள், அட்டைப்பெட்டி தயாரித்தல், ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பு, பொது இயந்திர பொருட்கள் உற்பத்தி செய்தல், ஜெனரேட்டர் தயாரிப்பு, பவுடர் கோட்டிங்கள் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10.58 கோடி மதிப்பில் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக ஓசூரையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. ஓசூரில் இயங்கி வரும் சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் பாதுகாப்பு உபகரணப்பொருட்களை தயாரிக்க முன்வந்து முன்னோடி நிறுவனங்களாக செயல்பட வேண்டும், என்றார். முன்னதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக முதுநிலை மேலாளர் மோகன், தொழில் நிதி திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின்போது, டிஆர்ஓ., ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x