

பாதாள சாக்கடை திட்ட ஆள்நுழை குழிகளால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதாக, உடுமலை நகர மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடுமலை நகராட்சியில் ரூ.56.07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை, குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தியது. 2015-ல் பணிகள் நிறைவடைந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 16,324 வீடுகள் மூலமாக நாளொன்றுக்கு 7.81 மில்லியன் லிட்டர் கழிவு நீர், பூமிக்கடியில் 97 கி.மீ. க்கு பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்கள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக 3,200 இடங்களில் ஆள்நுழை குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதலே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின்போது, பூமிக்கடியில் சென்ற கழிவு நீர் சாலை களில் ஆறாக ஓட தொடங்கியது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "அவரவர் வீடுகளில்சேமிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வந்த மனித கழிவுகளை, பாதாள சாக்கடை எனும் பெயரில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களில் இணைக்கப்பட்டது. ஆனால்,ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலை களில் ஆறாக ஓடியதுடன், குடியிருப்புகளிலும் புகுந்தது.
தளி, தாராபுரம், பழநி, ராஜேந்திராசாலைகளிலும், நகரின் குறுக்கு சாலைகளிலும் பல இடங்களில் ஆள்நுழை குழிகளின் மூடிகள் உடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. 6 ஆண்டுகளாக தொடரும்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீருடன், மழை நீரையும்வீடுகளில் இருந்து இணைத்துள்ளனர். மது பாட்டில்கள், பயன்படுத்திய துணிகளால் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அவற்றை கண்டறிந்து அகற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விரைவில் நிலைமை சீராகும் என்று நம்புகிறோம்,’’ என்றனர்.