Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

காட்பாடியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் :

காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் துறையினர் நேற்று அதிகாலை நடைமேடைகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு ரயில் அங்கு வந்தது.

அந்த ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். இதில், டி-3 பெட்டியில் சோதனை நடத்தியபோது கையில் பெட்டியுடன் அமர்ந்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் துறையினரை கண்டதும், ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்க முயன்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பெட்டியை வாங்கி சோதனையிட்டனர். அதில், 13 கிலோ கஞ்சா இருப்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திச்செல்வதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ரயிலில் கஞ்சா கடத்தியதாக ஒடிசா மாநிலம் பாலாங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுலால்சாஹூ(42) என்பவரை கைது செய்தனர்.பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட 13 கிலோ கஞ்சா, கைது செய்யப்பட்ட பாபுலால்சாஹூவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஆற்காடு நகர காவல் துறையினர் தாழனூர் அடுத்த கிருஷ்ணாவரம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த எழில் (25) என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்த னர். மேலும், அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x