

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் சிலையை மீட்பதில் பாஜகவினர், வட்டாட்சியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பாஜகவினர் சிலையை மீட்டு கொடி கம்பம் கீழே வைத்து பூஜை செய்தனர்.
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் சிலர் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வந்தனர். கோயில் கட்டும் இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தம் எனக் கூறி வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோயிலை அகற்றினர். தொடர்ந்து ஆஞ்சநேயர் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். இந்நிலையில் நேற்று பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் அக்கட்சியினர் சிலையை ஒப்படைக்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பாஜகவினர், வட்டாட்சியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் பாண்டி பேச்சுவார்த்தை நடத்தி சிலையை பாஜகவினரிடம் ஒப்படைத்தனர். சிலையை பெற்ற பாஜகவினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் உள்ள கொடிக் கம்பத்துக்கு கீழே வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து கோயில் இடிக்கப்பட்ட இடத்திலும் சிலையை வைத்து பூஜை செய்தனர். அதன் பிறகு அர்ச்சகர் ஒருவர் வீட்டில் சிலை வைக்கப்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் முன் கோயில் கட்ட அனுமதிக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோயிலுக்காக வாங்கப்பட்ட கம்பிகள் திருடுபோனதாக கூறி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்பி திருடியவர்களை விரைவில் கைது செய்வதாக போலீஸார் கூறியதை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.