

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சிலையை பாதுகாப்பாக வைக்காததைக் கண்டித்து செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் செங்கம் நகரம் துக்காப்பேட்டையில் அரசு அனுமதி பெறாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை வைக்க அதிமுகவினர் முயன்றனர். இதையடுத்து, ஜெயலலிதா சிலை பறிமுதல் செய்யப்பட்டு, செங்கம் பேரூராட்சி அலுவலகத்துக்கு கடந்தாண்டு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. அந்த சிலையை பாதுகாத்து பராமரிக்காமல், குப்பை தொட்டிகள் வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மனோகரன் தலைமையிலான அதிமுகவினர், செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சிலையை பாதுகாப்பாக வைக்காமல், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகின்றனர் என குற்றஞ்சாட்டினர். இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வட்டாட்சியர் முனுசாமி, காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் ஆகியோர் அதிமுக வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலையை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுகவினர், சிலையை பாதுகாப்பாக வைக்கும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து, அவசர அவசரமாக இரும்பு தகர கூடம் அமைக்கப்பட்டு, 2 மணி நேரத்தில் ஜெயலலிதாவின் சிலை, பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற அதிமுகவினரின் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.