

தமிழக காவல்துறையில் சிறப்புடிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பிஆகிய இருவரும் நேரில் ஆஜரா னார்கள்.
இதேபோல் அரசு தரப்பு சாட்சிகளான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி, அவரது கணவரான அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, காவல்துறை ஏடிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித் தனர்.
அரசு தரப்பு சாட்சிகளான அவர்கள் இருவரும் சுமார் 4 மணி நேரம் அளித்த சாட்சியங்களை நடுவர் கோபிநாதன் பதிவு செய்து கொண்டார். பின்னர் இரண்டு சாட்சிகளிடமும் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து வரும் 15 மற்றும் 16 என இரு தேதிகளில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு குறுக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளிலும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி கண்டிப்பாக நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 15-ம்தேதிக்கு நடுவர்.கோபிநாதன் ஒத்தி வைத்தார்.