

போலுப்பள்ளி வன விரிவாக்க மையத்தில் ஜப்பான் நாட்டு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி வன மண்டலம், கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், தனியார் நிலங்களில் மரம் நடவு செய்தல் பகுதி -2 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னோடி கள ஆய்வு மேற்கொள்ள, ஜப்பான் நாட்டின் நிதி உதவி திட்ட தெற்கு ஆசிய கோட்ட அலுவலர் சசாகி ஹிராரி, சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் விஜேந்திர சிங் மாலிக் ஆகியோர் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி வன விரிவாக்க மையத்திற்கு வந்தனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள நாற்றங்கால், மண்புழு உர உற்பத்தி கூடம் ஆகியவைகளை தணிக்கை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, உழவர் உற்பத்தி சங்க உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட பயனாளிகள் ஆகியோருடன் கலந்துரையாடினர். பின்னர் அங்கு மரக்கன்றுகளை ஜப்பான் நாட்டு அலுவலர் நடவு செய்தார்.
இந்நிகழ்வின் போது, 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் சுழல் நிதி கடன் வழங்கியும், மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில் தருமபுரி வன பாதுகாவலர் பெரியசாமி, ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலர் மகேந்திரன், உதவி வன பாதுகாவலர் முனியப்பன், வனச்சரகர்கள் குமார், சோமசேகர், மகேந்திரன், சக்திவேல், மனோகரன், வீரமணி, ரவி, முனிரத்தினம், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.