15 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடியில் - மழைநீர் வடியாததால் மக்கள் தவிப்பு :

தூத்துக்குடி மச்சாடோ நகரில் 15 நாட்களுக்கு மேலாக  குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர். 										              படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மச்சாடோ நகரில் 15 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் சில இடங்களில் 15 நாட்களுக்கு மேலாகியும் மழைநீர் வடியாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 25-ம் தேதி அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி இரவு, பகலாக நடைபெற்றது.

இந்நிலையில் இடையிடையே பெய்த கனமழை மற்றும் நிலத்தடி நீர் ஊற்றெடுத்ததால் மழைநீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக இதை கண்காணித்து பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக மழையின்றி வெயில் அடித்ததால் மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் ஓரளவுக்கு வடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது. ஆனால், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாடோ நகர், அன்னை வேளாங்கண்ணி நகர் உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையோரம் பெரிய குழாய் பதித்து மழைநீரை பம்பிங் செய்து, நகருக்கு வெளியே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக முடுக்கி விடப்பட்டிருந்தது. இப்பணிகள் நேற்று முடிவடைந்து, மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் பம்பிங் செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் தூத்துக்குடி நகரில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விடும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in