Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

கடந்த 3 மாதங்களில் சரிபார்ப்பு பட்டியலில் இருந்த - ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு : மண்டல சரக்கு சேவை வரித்துறை முதன்மை ஆணையர் தகவல்

கடந்த 3 மாதத்தில் சரிபார்ப்புப்பட்டியலில் இருந்த ஏற்றுமதியாளர்கள் 100 பேரின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது என ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் கோவை மத்திய கலால் மற்றும்சரக்கு சேவை வரித்துறை முதன்மை ஆணையர் குமார் பேசினார்.

கோவை மத்திய கலால் மற்றும்சரக்கு, சேவை வரித்துறை சார்பில்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். கோவை மத்திய கலால் மற்றும் சரக்கு, சேவை வரித்துறை இணை ஆணையர் விஜயகிருஷ்ணவேலன் வரவேற்றார்.

கோவை மத்திய கலால் மற்றும்சரக்கு, சேவை வரித்துறை முதன்மை ஆணையர் குமார் பேசியதாவது:

அரசு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தும் ஒரு சிலஏற்றுமதியாளர்கள் செய்யும்தவறுகளை தடுக்கவே வரித்துறையால் சரிபார்ப்புப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் நேர்மையான ஏற்றுமதியாளர்களும் சிரமங்களை சந்திக்கின்றனர். அவர்களும் ‘ரீஃபண்ட்’தொகையை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட (சரிபார்ப்புப் பட்டியல் ஏற்றுமதியாளர்கள்) பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நடைபெறும் சிறப்பு முகாம்களை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த3 மாதத்தில் மட்டும் சரிபார்ப்புப்பட்டியலில் இருந்த 100 ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கன்டெய்னர் பற்றாக்குறை, நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், எந்தஇடையூறு ஏற்பட்டாலும், அதனை சமாளித்து வெற்றியும் பெறுகிறார்கள். ஏற்றுமதியாளர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் திருப்பூர் மண்டல துணை ஆணையர் சித்தார்த்தன், சைமா சங்கத் தலைவர் ஈஸ்வரன், நிட்மா சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் முத்துராமன், சிம்கா சங்கத் தலைவர் விவேகானந்தன், ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் செந்தில்குமார், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி, டெக்பா சங்கத் தலைவர் காந்த்உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x