

வாலாஜாபாத் அருகே உள்ள நாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ஆர்.பழனி. இவர்அதிமுக விவசாய அணி காஞ்சிபுரம் மாவட்டச் செயலராகவும், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.
இவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்கிரஹப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. எனவே பழைய வீட்டின்அறையை பூட்டிவிட்டு புதியவீட்டில் 2 நாட்களாக குடும்பத்தினர் அனைவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பழைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், புதுமனை புகு விழாவின்போது தரப்பட்ட பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பழனி அதிகாலையில் எழுந்து பழைய வீட்டுக்குச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம், நகைகள் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக வாலாஜாபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.