Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் - விநாயகர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு :

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

செங்கல்பட்டை அடுத்த வேண்பாக்கம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பல்வேறு மதத்தைச் சார்ந்த மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த வளாகத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வார காலமாக ஒரு சிறிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கட்டிடம் விநாயகர் கோயில் என தெரியவந்துள்ளது. தொழில் பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து இந்த கோயிலை கட்டி வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு மதங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத் தலம் அமைப்பது மாணவர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய மாணவர்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர்ஆனந்தராஜ், மாவட்ட செயலாளர்தமிழ் பாரதி ஆகியோர் மாவட்டஆட்சியர் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து சமயங்களைச் சார்ந்தமாணவர்களும் பயிலக் கூடிய நிலையில், கல்வி நிலைய வளாகத்தில் தற்போது இந்து மதம் சார்ந்தகோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்வி நிலையத்தில் மதச்சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற முறையில் கோயில் கட்டுமான பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, “மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து என்னிடம் விளக்கம் கேட்டுள்ளார். நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விநாயகர் கோயில் கட்டும் பணியை நிறுத்தி விட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x