சேலம் வழியாகச் செல்லும் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் :
சேலம் வழியாகச் செல்லும் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாகச் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்துவதாக சேலம் ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரயில்வே போலீஸார் சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திர மாநிலம் டாடா நகரில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் ரயிலில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவு பெட்டியில் இருந்த பெரிய பையில் சோதனை நடத்தியபோது, அதில் 10 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், ரயில் பயணிகளிடம் விசாரணை நடத்தினர். கஞ்சா பொட்டலங்களை போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸார் கஞ்சா கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
