Published : 08 Dec 2021 04:11 AM
Last Updated : 08 Dec 2021 04:11 AM

மயான பகுதிக்கு செல்ல பாதை வசதி கேட்டு - திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் : அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

திருப்பத்தூர் அருகே மயானப் பகுதிக்கு செல்ல பாதை வசதி கேட்டு பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்துார் ஒன்றியம் இருணாப்பட்டு ஊராட்சியில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களது உடல் ஊரின் எல்லையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர்.

தற்போது, மயானத்துக்கு செல் லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், கனமழை காரணமாக மயானத்தை சுற்றி தண்ணீர் தேங்குவதால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்வதில் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி(75) என்பவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது, உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மயானத்துக்கு செல்லும் பாதையிலேயே மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் மயானத்தில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருணாப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திருப்பத்தூர்- ஆலங்காயம் பிரதான சாலை, இருணாப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே தரையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்துார் ஒன்றியக்குழுத் தலைவர் விஜயா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் மற்றும் கிராமிய காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், மயான சாலையை ஆக்கிரமித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, தொடர் மழை காரணமாக மயானம் அருகே உள்ளஏரி நிரம்பி மழைநீர் மயானத்தை சூழ்ந்துள்ளது.

எனவே, நீர் வற்றியதும் தரைப்பாலம் அமைத்து தர நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, தற்காலிகமாக மண் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x