

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மாநகரின் பல்வேறு இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியது. திருப்பூர் கொடிக்கம்பம் வ.உ.சி. நகர் 5-வது வீதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல தோட்டத்துப்பகுதியிலும், மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது, மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில், மழைநீரை வெளியேற்றவும், இப்பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
மழை அளவு (மி.மீ.)
நிரம்பிய 100 ஏக்கர் குளம்
கூலி தொழிலாளர்கள் வசிக்கும் நேரு நகர் குடியிருப்பையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, அருகே உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். மேற்கண்ட கிராமத்தில் வட்டாட்சியர் ராமலிங்கம் தலைமையிலான வருவாய் துறையினர் முகாமிட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
இதில், மழை நீர் செல்லும் பாதையை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக உடனடியாக அகற்றப்பட்டன.
உடுமலை நகர் ராஜேந்திரா சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதே வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகமும், கேந்திரியா வித்யாலயா பள்ளியும் இயங்குகின்றன. இந்த வளாகத்திலும் மழைநீர் தேங்கி, கட்டிடங்களை சுற்றிலும் குளமாக காணப்படுகிறது. நேற்று அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.